search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் கடை பொதுமக்கள் முற்றுகை"

    சுவாமிமலை அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். #Tasmac

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம் சுவாமிமலையை அடுத்த திருவலஞ்சுழியில் கடந்த 30-ந் தேதி புதிதாக ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. திருவலஞ்சுழி அரசலாற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கடைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த கடையால் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும், அந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் மாணவ- மாணவிளுக்கும் இடையூறு ஏற்படும் என்று அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் கூறினர். ஆனால் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த சுவாமிமலை இன்ஸ்பெக்டர் ரேகாராணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் டாஸ்மாக் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தால், அவரது உத்தரவின் பேரில் கடையை மூடுவோம் என்று தெரிவித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இது குறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தீந்தமிழன் கூறியதாவது:-

    திருவலஞ்சுழி டாஸ்மாக் கடையைமூடக்கோரி முற்றுகை போராட்டம் செய்தோம். டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதின் பேரில் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளிக்க உள்ளோம். மாவட்ட நிர்வாகம் கடையை மூடாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது குறித்து டாஸ்மாக் கடை மேலாளர் திருஞானம் கூறும்போது,

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 28-ந் தேதி 28 கடைகள் மூடப்பட்டு 15கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் கும்பகோணம் நகரத்தில் 5 கடைகளும், தாராசுரம் மற்றும் திருவலஞ்சுழி ஆகிய இரண்டு இடங்களில் புதியதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. திருவலஞ்சுழியில் டாஸ்மாக் கடை பிரச்சனை தொடர்பாக பேச்சு வார்த்தையில் தீர்வு காணப்பட்டது என்றார். #Tasmac

    ×